பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை அணுகுவதற்கான திட்டத்தின் அங்குரார்ப்பண விழா.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, ஐக்கிய நாடுக ள் அபிவிருத்தி நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் ஆகியவை இணைந்து, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி பங்களிப்புடன், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை அணுகுவதற்கான திட்டத்தின் அங்குரார்ப்பண விழா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா சமன்மலி குமாரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (2023.05.12) காலை கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைகளை இல்லாதொழித்து, அது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஐந்து வருட காலத்திற்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota), இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதி குன்லே அதெனி (Kunle Adeniyi), பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சுதர்சன்னி பெர்னாண்டோ புள்ளே, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, இராஜதந்திரிகள், ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.