சமீபத்திய செய்தி
2025ஆம் ஆண்டிற்கான உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் வழங்கிய செய்தி
2025ம் ஆண்டிற்கான உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்களுக்கான கௌரவ அமைச்சரின் செய்தி
எமது நாட்டின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் 2025ம் ஆண்டிற்கான உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு இச்செய்தியினை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
சிறுவர் தினமானது நாம் அனைவரும் இலகுவில் மறந்துவிடக்கூடிய ஒரு உண்மையை மீண்டும் நினைவூட்டுகின்றது - அதாவது, சிறுவர்கள் இன்றைய நாட்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் சொந்தமானவர்கள் ஆவர். அவர்களின் கண்களில் களங்கமற்ற நேர்மை, புத்துணர்ச்சி, ஆக்கப்பூர்வமான கற்பனை மற்றும் துணிச்சல் ஆகியவற்றைக் காண்கிறோம். இவை இன்றைய உலகில் அவசரமாகத் தேவைப்படுகின்ற அதேவேளை, அரிதாகி வரும் குணங்களாக இருக்கின்றன. எனவே, பெரியவர்களாகிய நாம் சிறுவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் அளவுக்குத் தாழ்மையுடன் இருக்க வேண்டும்.
சமூகத்தில் தலைமைத்துவத்தை வழிநடத்தும் பல சக்திகளில், ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம், "சிறுவர்களுக்கான பாதுகாப்பான உலகம் - ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கால சந்ததி" எனும் விசேட கவனத்துடன், "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையின்கீழ் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்துள்ளோம். இத் தொலைநோக்கானது, நாட்டின் சிறுவர்களின் நலனுக்கான எங்கள் அர்ப்பணிப்பையும் திட்டங்களையும் கோடிட்டுக் காட்டுகின்றது.
சிறுபராயம் முதல் சமூகத்தில் பொறுப்புள்ள பிரஜைகளாகும் வரை, தேசியம், மதம் அல்லது பால்நிலை அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் — சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், எந்தவொரு சிறுவரும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் வளங்களையும் வாய்ப்புக்களையும் நியாயமானமுறையில் அணுகக்கூடிய நிலையினை உருவாக்குகின்ற அதேவேளை, அவர்களின் போஷாக்கு, கல்வி மற்றும் பராமரிப்புத் தேவைகளையும் பூர்த்திசெய்வதற்கு முயற்சிக்கின்றோம்
சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும் எதிர்காலத்திற்கான முதலீடு என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.
"உலகை வழிநடாத்த - அன்பால் போஷியுங்கள்’’ எனும் இவ்வாண்டின் தொனிப்பொருளானது, இந்த உலக சிறுவர் தினத்தில் நீங்களும், நானும், சமூகமும் ஒட்டுமொத்தமாக சிறுவர்களிடம் எமது கூருணர்வினை ஆழப்படுத்தவும், பரஸ்பர இரக்கம் மற்றும் புரிதலின் மூலம் அவர்களுடன் நெருங்கிச் செல்லவும் ஒரு வாய்ப்பாக அமையட்டும்.
எனவே, எங்களின் அன்புக்குரிய அனைத்துச் சிறுவர்களுக்கும் -
உலகம் முழுவதற்கும் நாளைக்கான உத்தரவாதத்தினைச் சுமந்து செல்பவர்கள் நீங்கள்தான்.
நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக, அன்பினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அரணாக, கைகோர்த்து நிற்கின்றோம்.